ஏன் விழுந்தோம்?
தினம் தினம் தோல்வியின்
விடியல். உலகில் வேற எந்த இனமும் இந்த நூற்றாண்டில் இப்படி ஒரு
அழிவையும்,அவமானத்தையும் சந்தித்ததில்லை.சுமார் 2 லட்சம் சொந்தங்களை சாக
கொடுத்துவிட்டு, வீடு இழந்து, நாடு இழந்து,மானம் இழந்து கேட்பதற்கு நாதி
இல்லாமல் வீதியில் அம்மணமாக நிற்கும் ஒரு இனம் நம் தமிழ் இனம்.
இதை
அவன் உணராமல் இருப்பதும், உணர மறுப்பதும் ஜாதி என்கிற பூதம் செய்யும்
திருவிளையாடல்கள்களால்தான். இன உணர்வு என்பது உயிரில் கலந்திருக்க
வேண்டியது, தமிழனிடத்தில் மட்டும் வெறும் வேர்வையாக இருக்கிறது. ஆனால் ஜாதி
உணர்வு மட்டும் இரத்தமாகவும் சதையாகவும் நரம்பாகவும் எலும்பாகவும் பிண்ணி
பிணைந்து இருப்பது தமிழன் ஒரு அதிசிய பிறவி என்ற எடுத்துக்காட்டுதலுக்கு
ஒரு அடையாளம் ஆகும் .
சுமார் 50,000
வருடங்களுக்கு முன்னர் தோன்றிய நம் மொழி இன்று தமிழ்நாட்டின் தெரு
வீதிகளில் கூட இல்லை. உலகம் கண்டு வியக்கும் பல விடயங்களை நம் முன்னோர்கள்
முன்னமே செய்திருந்தாலும்,நாடு பல நாம் ஆண்டிருந்தாலும்,சாதனைகள் பல நாம்
செய்திருந்தாலும் இன்று சோதனையின் விளிம்பில் நாம் இருப்பதற்கு நம்மை தவிர
வேறு யாருமே காரணமில்லை.
நேர் கோட்டில்
போகும் எறும்பு கூட்டத்தின் மத்தியில் கை வைத்தல் எறும்பு கூட எதிர்த்து
நிற்கும். சிறு எறும்புக்கு இருக்கும் முறுக்கு கூட தமிழனிடத்தில் இல்லாது
போனதை கண்டு இயற்கையும் வியந்து போகும் .
இந்தியா
என்கிற இந்த தேசத்தை ஆங்கிலேயர்கள் ஆள தொடங்கிய காலத்தில் அவங்களுக்கு
அடங்க மறுத்த மாவீர மறவர்கள் நம் தமிழ் மன்னர்கள் தான் என்று நம்மில்
எத்தனை பேருக்கு தெரியும்? மாவீரன் பூலித்தேவன், தளபதி ஒண்டிவீரன்,மருது
பாண்டியர்கள்,வீர மங்கை வேலு நாச்சியார்,தீரன் சின்னமலை,பெரிய கடலடி,வீரன்
முத்துவடுககொன் போன்ற எண்ணற்ற வீரர்களை வாரி வழங்கிய தமிழ் மண்ணின் வீரம்
இன்று திரைப்படங்களின் பெயராக மட்டுமே மாறி நிற்கிறது.
2009யில்
இறந்து போன சுமார் 2 லட்ச தமிழ் உயிர்களின் எண்ணிக்கையை ஜாதி வாரியாக
கணக்கு எடுத்து அது மட்டும் வெளியே வந்தால்,தமிழ்நாடே பற்றி எரியும்,
இலங்கை என்ற தீவே இந்த உலகத்தின் வரைபடத்திலே இல்லாமல் போகும். ஜாதிக்காக
வீதியில் இறங்கும் தமிழன், இனம் என்று வந்தால் பிணக்குவியலே அவன் முன்னால்
இருந்தாலும் எதிர்த்து நிற்கமாட்டான். செத்தவன் என் ஜாதிக்காரன் இல்லையே??
என்று போய்விடுவான்.
வெறும் ஜாதி பெருமைகளை
பேசிக்கொண்டு, வீணான வறட்டு கௌரவத்தை வைத்துகொள்ள அதிகம் விரும்புகிறான்.
வறுமையும் இயலாமையும் அவனோடு உடன்படிக்கை செய்து கொண்டாலும், ஜாதியோடு
அவன் உறவு என்றுமே நல்லுறவே.
சொந்த
இரத்தத்திற்குள் யுத்தம் செய்யும் தமிழன், அவன் சொந்தங்கள் இரத்தம்
சிந்தினால் யுத்தத்திற்கு போவதில்லை. ஜாதிக்கு சங்கம்,ஜாதிக்கு தலைவன்,
அந்த சங்கத்திற்குள் சேர்வதற்கு மாத சந்தா, ஜாதிக்குள் பெண் எடுப்பது,பெண்
கொடுப்பது,ஜாதிய திருவிழாக்களை நடத்துவது,இப்படி ஜாதிக்காகவே
வாழ்ந்து,ஜாதிக்காகவே செத்தும் போகிற தமிழனிடத்தில் இனவுணர்வு எப்படி
இருக்கும்?அடுத்து அவன் நம்புவது மதம் என்னும் மாயாஜாலத்தை.
யானைக்கு
மதம் பிடித்தால் நாசம் நிச்சியம்,மனிதனுக்கு மதம் பிடித்தால் சர்வநாசம்
சத்தியம். இந்த உண்மையை உணராமல் மதத்தின் மயக்கத்தில் மிதந்துக்
கொண்டிருக்கிறான் தமிழன்.மதம் மனிதனை பக்குவபடுத்துவதற்கே தவிர மனிதனை
மனிதன் வேட்டையாடுவதற்கு அல்ல. ஜாதி சண்டைக்கு பிறகு தமிழன் அதிகம்
ஈடுபடுவது மதரிதியான சண்டைகளில்தான்.
செங்கலுக்கு
சூலம் காட்டுவது,மண்டையில் தேங்காய் உடைப்பது, சக மனிதனை சாமியாக
பார்ப்பது, அவனிடத்தில் குழந்தை வரம் கேட்பது, பாவ மன்னிப்பு கேட்பது,
பரிகாரம் செய்வது, பௌர்ணமி அமாவாசையும் நிலாவின் இயல்பு என்று தெரிந்தும்
விரதம் இருப்பது,தீ மிதிப்பது தேர் இழுப்பது என்று ஒவ்வொரு மதத்திலும் உள்ள
மூட நம்பிக்கையை மண்டையில் ஏற்றி இறையடி தேடி, பார்க் கடல் ஓடி ஓடி ஓயாமல்
இருக்கும் தமிழனிடத்தில் இனத்திற்காக நேரம் ஒதுக்க எதிர்பார்ப்பது தவறு
தான்.
பிற உயிர்களை வதைப்பது எப்படி குற்றமோ,
அதை விட குற்றம் சக மனிதனையே உயர்ந்தவனாகவும், தாழந்தவனாகவும் கருதுவது.
இந்த மதத்தில் நாங்கள்தான் உயரந்தவர்கள்,அவர்கள் தாழ்ந்தவர்கள் என்று
கூறுவதை ஆறு அறிவு படைத்த மனிதன் ஏற்றுக் கொள்வது என்பது அவமானத்தை
வெகுமானமாக கருதும் கேவலமான செயல்.
மொழியுணர்வும்
இனவுணர்வும் இரு கண்களாக இருக்க வேண்டிய தமிழனிடத்தில் ஜாதி உணர்வும் மத
உணர்வும் இரு கண்களாக மாறி போனதன் விளைவு இன்று நாயை விட நம்மை பிறர்
ஏளனமாக பார்க்கும் நிலைக்கு கொண்டு வந்துவிட்டது.
நம்முடைய
தாய்மொழியை நாம் பிற மொழிக்காரணுக்கு சொல்லிக் கொடுப்பது என்பது இயற்கை.
ஆனால் இன்றோ தமிழனுக்கே தமிழ் சொல்லித் தர வேண்டிய அவல நிலை
உருவாகிவிட்டது. ஆங்கிலேயன் அவன் மொழியோடு சேர்த்து தமிழை
பேசுவதில்லை,தமிழன் ஆங்கிலம் சேர்க்காமல் தமிழ் பேசுவதில்லை. 'ழ' என்ற இந்த
எழுதும் அதன் ஓசையும் தமிழ்மொழியின் தனிசிறப்பு.இத்தகைய சிறப்பு மிக்க
மொழியின் பிள்ளைகள் இன்று தமிழில் பேசினால் அவமானம் என்று கருதுவது,பெற்ற
தாயையே இவள் தான் என் தாய் என்று மகனே சொல்ல தயங்கும் இழிவான செயல்.வணக்கம்
வரவேண்டிய இடத்தில் குட் மோர்னிங் வருகிறது,நன்றி வரவேண்டிய இடத்தில
தேங்க்ஸ் வருகிறது.நன்றியே வராத நாம் வாயில் மொழியின் மீது நன்றி உணர்வு
எப்படி வரும்?
எப்போது மொழியில் கலப்படம்
வந்ததோ,அப்போதே மொழியின் மீது இருந்த பிடிப்பு போனது,எப்போது மொழியின் மீது
இருந்த பிடிப்பு போனதோ,அப்போதே நம்முடைய வரலாற்றின் மீதும் பிடிப்பு
போனது,எப்போது நம்முடைய வரலாற்றின் மீது பிடிப்பு போனதோ,அப்போதே இனவுணர்வை
இழந்து போனோம்.அப்போது தான் விழுந்து போனோம்...
பேராசிரியர் அருண்குமார்
