ஜி.ஜி.பொன்னம்பலம் அவருக்குப் பின்னால் தந்தை செல்வா என்று ஈழதேசத்தில் தமிழருக்கான உரிமைக்காகப் போராடி நின்றவர்கள் பலபேர். தந்தை செல்வா அவர்கள் அறவழியில் மேற்கொண்ட பல முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்தது என்பதுதான் வரலாற்று உண்மை.மேலும், தந்தை செல்வா அவர்களே அறம்சார்ந்த போராட்டத்தில் தான் தோற்றுவிட்டதாகக் கூறினார். தந்தை செல்வாவிற்கு பிறகு வந்த ஐயா அமிர்தலிங்கம் இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது முன்னெடுத்த பல முயற்சிகள் சிங்களப் பேரினவாத இரட்டை வேடத்தால் படுதோல்வியடைந்தது. மேலும், இலங்கையின் எதிர்க்கட்சியின் தலைவராக அவர் சிங்கள அரசிடம் செய்துகொண்ட பல ஒப்பந்தங்கள் காற்றில் கலந்துபோனது காலத்தின் கொடுமைகளில் ஒன்று. ஐயா அமிர்தலிங்கம் போராளிகளுடன் கொண்ட உறவு குறிப்பாக விடுதலைப்புலிகளிடம் அவர் கொண்டிருந்த தொடர்பு மிக முக்கியமானது. அமைதியை ஆயுதமாக்கி, ஆயுதத்தை அவர் அமைதியாக்க செய்த முயற்சிகள் எல்லாம் சிங்கள பேரினவாத அரசின் இனவெறித் தாக்குதலால் சல்லடையாக நொறுங்கிப்போனது.
சிங்கள அரசும், இந்தியப் பேரரசும் செய்துகொண்ட ஒப்பந்தம் விடுதலைப்புலிகளின் தலைவரும், தமிழ்த்தேசிய தலைவருமான மேதகு வே.பிரபாகரன் அவர்களின் சிந்தனைக்கும், ஈழத்தமிழ் மக்களின் நலனுக்கும் எதிராக இருந்தது. ஆனாலும், அமைதி ஒப்பந்தத்தை மதித்து புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்தார்கள். போர் நிறுத்த காலங்களில் சிங்கள அரசும், இந்திய அமைதிப்படையும் ஈழத்தில் செய்த கொடுமைகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அமைதி ஒப்பந்தத்தை மதித்தப் புலிகள், ஒரு கட்டத்தில் ஆயுதத்தை எடுத்ததற்கு ஒரு காரணம், இந்திய அமைதிப்படையும், சிங்கள இராணுவமும் செய்த ‘பச்சைத்துரோகம்’. இந்திய அமைதிப்படையின் உதவியோடே சிங்கள அரசு ஈழத்தில் சிங்களவர்களை குடியமர்த்தியது. ஈழப்பெண்களை இந்தியப்படைகள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கியது; குழந்தைகளைக் கொன்று குவித்தது; குடும்பங்களை சிதைத்தது; அமைதி ஒப்பந்தக்காலங்களில் 17 புலிகளை சிங்கள இராணுவம் கைது செய்தது; அவர்களை விடுவிக்க இந்திய அமைதிப்படையின் இராணுவம் மூலம் கேட்டபோது, அதை அவர்கள் மறுத்தது; இதையெல்லாம் தடுக்க புலிகளின் தளபதிகளில் ஒருவரான திலீபன் பட்டினிப்போராட்டம் மேற்கொண்டது; அவரின் பட்டினிப்போராட்டத்தை உதறித்தள்ளிய அரசுகளும், அதனால் அந்த மாவீரனின் உயிர் துறப்பும் ஒரு முக்கியமான வரலாற்று மாற்றத்தை ஈழத்தில் ஏற்படுத்தியது.
உலகத்தில் எத்தனையோ போர்கள் நடத்திருக்கிறது. அதில் பலரின் வீரம் வரலாற்று ஏட்டில் ஏறியிருக்கிறது. ஆனால், அதே வரலாற்றில் பலரின் வீரம் மறைக்கப்பட்டு இருக்கிறது. பல போர்களும் காணாமல் போயிருக்கிறது. அப்படி வரலாற்றில் மறைக்கப்பட்ட போர்தான் ஈழத்தில் நடந்த இந்திய இராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்த யுத்தம். இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்த யுத்தத்தில் இந்திய இராணுவம் இழந்தது 1200 வீரர்களைத்தான். ஆனால், புலிகளோடு இந்திய இராணுவம் இழந்தது 1500க்கும் மேற்பட்ட வீரர்களை. உலகத்தின் மூன்றாம் பெரிய இராணுவம் ஒரு நாட்டின் மக்கள் இராணுவத்திடம் தோற்று, முகத்தை தொங்கப்போட்டுக் கொண்டு நாடு திரும்பியது. ராஜாராஜசோழன் உலகின் மூன்றாம் பேரரசை நிறுவினான். அவன் வழி வழியே வந்தப் பேரப்பிள்ளைகள் உலகின் மூன்றாம் பெரிய இராணுவமான இந்திய இராணுவத்தை வீழ்த்தி வெற்றி வாகை சூடினார்கள் என்ற உண்மை நம்மில் எத்தனைப்பேருக்குத் தெரியும்? உலக இராணுவத்துக்கு எல்லாம் முன்மாதிரியாகவும், உலகிலே முதல்முறையாக கரும்புலிகளையும், தன் நாட்டு மக்களைக் காக்க தன் மக்களைக் கொண்டே ஆறு படைகளை கட்டிய ஒரு தலைவர் தமிழ்த்தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் மட்டும்தான்.
1976 தொடங்கி 2009 வரை ஈழப்போரில் புலிகள் பெற்ற வெற்றிகளும், இலங்கை நிலப்பகுதியில் மூன்றில் இரண்டு பங்கும், கடல்கள் பகுதிகளில் நான்கில் மூன்று பங்கும் புலிகள் கட்டுப்பாட்டில் இருந்தது.காலச்சக்கரம் அதன் வேகத்தை கூட்ட நண்பர்கள் துரோகிகளாக மாறியக் காட்சிகளும், முதுகில் குத்தியக் காட்சிகளும் புலிகளை 2006 ஆண்டு முதல் நடந்த போரில் பின்வாங்க செய்தது. இந்தியா உட்பட 9 நாடுகள் சேர்ந்து ஈழத்தில் நடத்திய இறுதிப்போரில் அப்பாவி மக்கள் 2 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டது வரலாற்று அலங்கோலம். இன்று ஈழ யுத்தத்திற்குப் பிறகு, அமைதி என்ற பெயரில் ஒரு கானல்நீர் அமைதி ஏற்பட்டிருக்கிறது. மக்கள் சனநாயகத்தின் பெயரில் நம்பிக்கை வைத்து தேர்தல், வாக்கு, அதிகாரம் என்னும் ஒரு மாற்றம் வரும் என்ற நம்பிக்கையில் தற்போது நடைபெற்ற இலங்கை உள்நாட்டின் தேர்தலின் மூலம் ஐயா சம்பந்தன் அவர்கள் எதிர்க்கட்சித்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 37 ஆண்டுகளுக்குப் பின்னர் ஐயா அமிர்தலிங்கத்திற்குப் பின்னர் அதே நாற்காலியை ஒரு தமிழர் அடைந்திருக்கிறார். தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியேற்றத்தை நிறுத்துவது , கிளிநொச்சியின் 10,000 இராணுவக் குடியிருப்பு செய்ய இருப்பதை தடுப்பது, ஈழத்தமிழர்களான பாதுகாப்பது என்று எண்ணற்ற பொறுப்பு ஐயா சம்பந்தனுக்கு இருக்கிறது. அதை அவர் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை தமிழ் மக்களுக்கு இருக்கிறது. மேலும், அது நடக்காதபட்சத்தில் வரலாற்றின் இயல்புபடி, அறம் தோற்றால் மறம் பிறக்கும் மறுபடியும்!!